Thursday 9 June 2016

சிவப்பு


இரவு, பெருமழை நின்ற தூவான நேரம்..  அமைதியான அந்த இருவழி சாலையின் தெரு விளக்குகள் அனைத்தும் மின்சாரமின்றி பிணமாகக்கிடந்தன.

 சாலையின் இருளையும், மழைப்பூச்சிகளின் சப்தத்தினையும் கலைத்துக் கொண்டும், சாலையில் தேங்கிக்கிடந்த சிறு சிறு தண்ணீர் குட்டைகளை கடந்து வேகமாக காரில் வந்து கொண்டிருந்தான் பரத்.

முகத்தில் சற்று பதற்றம் படற.. அந்த இருள் நிறைந்த சாலையை வேகமாக கடந்து கொண்டிருக்கும் அந்த நொடி. சாலையின் வலப்புறத்தில் குடை பிடித்தவாறு காத்துக் கொண்டிருந்த பெண்னை பார்த்ததும் சற்று தணிந்தது. வேகத்தையும், பதற்றத்தையும் ஒரு சேர குறைத்து, வண்டியை நிறுத்தினான்.

சிவப்பு நிற சேலையும், அதே வண்ணத்தின் சற்று தூக்கலாக இதழ் சாயமும், தலை நிறைய மல்லிப்பூ வைத்து யாரையும் சுண்டி இழுக்கும் வசீகர மணத்துடனும், நின்று இருந்த ஸ்ருதி. காரின் அருகே வந்து நின்றாள்.

 இருவருக்கும் சாதகமாக பேரம் பேசி முடிக்கப்பட்டது. அங்கிருந்து கார் அவளை ஏற்றிக்கொண்டு மீண்டும் தனது பயணத்தை தொடங்கியது..

"உன்ன இந்த ஏரியால பார்த்து இல்லையே", என்று ஸ்ருதி கூற, "ஊருக்கு புதுசு இன்னைக்கு தான் வந்தேன்", என்றான் பரத்.

ஏன் இவ்ளோ வேகமா ஓட்டுற, அவ்ளோ அவசரமா, என்று சொல்லி சிரித்தாள்.

நீங்க நினைக்குற மாதிரி நான் இல்ல, எனக்கு உங்களோட உதவி வேணும். தயவு செஞ்சு முடியாதுனு சொல்லிடாதீங்க.  எனக்கு வேற யாரையும் இங்க தெரியாது. ப்ளீஸ்.

யோவ்.. என்னயா செல்ற.. இங்கபாரு மொதல்ல வண்டிய நிறுத்து.. என்னால உனக்கு எந்த உதவியும் பண்ணமுடியாது.

ப்ளீஸ், தயவு செய்து முடியாதுனு சொல்லாதீங்க. என் பொண்னு பெயர் யாழினி. 6வயசு ஆகுது. குழந்தை பிறந்து கொஞ்ச நாள்ல என் பொண்டாட்டி இறந்துட்டா. சொந்தம், பந்தம்னு யாரும் எங்களுக்கு இல்லை. தனி ஆளா இருந்துதான் என் பொண்ன வளர்த்தேன். சந்தோஷமா போய்டு இருந்த வாழ்க்கைல விதி விளையாடிருச்சு. இந்த ஊருக்கு வந்துட்டு இருக்கும் போது ஒரு ஆக்சிடென்ட். இப்ப அவ உயிருக்கு போராடிட்டு இருக்கா. தயவு செய்து அவள காப்பாத்துங்க. என்று கூறி கதறி அழத்தொடங்கினான். அவனுக்கு என்ன பதில் சொல்ல என்று புரியாமல் அமைதியாக  இருந்தாள் ஸ்ருதி. திடீரென பரத் காரை ஓரமாக நிறுத்தி இறங்கினான். ஒன்றும் புரியாதவளாக குழப்பத்தில் இருந்த ஸ்ருதி காரை விட்டு இறங்கினாள்.

அந்த நேரம் மின்சாரத்தின் வரவால் சாலையின் விளக்குகள் சட்டென உயிர் பெற, சாலையின் இருள் மறைந்து ஒளி பரவியது. வெளிச்சத்தில் சாலையின் மறுபுறம் மரத்தில் மோதியபடி ஒரு கார் நின்று கொண்டிருப்பதைக் கண்டாள். சாலையை கடந்து காரின் அருகே சென்றவளுக்கு காத்திருந்தது ஒரு பேரதிர்ச்சி. அவ்வளவு நேரம் தன்னுடன் பேசிக்கொண்டிருந்த பரத். காரில் இரத்த வெள்ளத்தில் பிணமாகக்கிடந்தான். காரின் பின் புற இருக்கையில் மயங்கிய நிலையில் காயங்களுடன் கிடந்தாள் யாழினி.

பயத்தின் உச்சத்தில் இருந்தவள், மெதுவாகத் திரும்பினாள். சாலையின் மறுபுறம் தான் வந்த காரை காணவில்லை, சுற்றும் முற்றும் பார்த்தால் சற்று தொலைவில் பரத்தின் ஆவியானது அவளை கண்கலங்கி கையெடுத்து கும்பிட்டவாறு காற்றில் கறைந்தது.

தன்னுடைய தந்தையின் வற்புறுத்தலில் விபசாரத்தை தொழிலாக எடுத்துக்கொண்டவளுக்கு , இன்று தான் புரிந்தது எல்லா ஆண்களும் தவறானவர்கள் இல்லை என்று,

நாட்கள் கடந்தன..

விபத்தில் பழைய நினைவுகளை முற்றிலும் இழந்த யாழினிக்கு  தாயாகவாக மாறினாள் ஸ்ருதி. புதியவாழ்கையில் தாயும், மகளும் சந்தோஷமா பயணித்தார்கள்.

இனி எல்லாம் சுபமே..




- மதுரை கார்த்திக்



No comments:

Post a Comment