Tuesday 21 June 2016

திருடா திருடிகாலை 9மணி,
வைகை விரைவு இரயில் திருச்சி இரயில் நிலையத்தை அடைந்த அந்த நொடி.. இரயிலில் இருந்து இறங்குபவர்களுக்கும், ஏறுபவர்களும் போட்டிபோட்டு முந்திக் கொண்டும், விட்டுக்கொடுத்து விலகிநின்றும், சிறுசிறு வாக்குவாதங்களோடு இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொண்டும் தங்களின் பயணத்திற்க்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.

பயணிகளின் கனிவான கவனம் முழுவதும் தற்போது வான் கிளித்து கொட்டிக் கொண்டிருக்கும் மழையின் மீதே இருந்திருக்க வேண்டும். ஏனெனில் நேற்று இரவு முதல் லேசான சாரலோடு பெய்த மழை கடந்த ஒரு மணி நேரமாக கனமழையாக கொட்டிக் கொண்டிருக்கிறது.

இரயில் நிலையத்தில் "டீ, காபி, சமோசா" போன்ற வார்த்தைகளின் கலவையான ஒலியும், "பாப்பா.. அடி வாங்க போற, மழைல நனையாதனு எத்தனை தடவ சொல்றது" என அதட்டும் அம்மாவின் சப்தமும், "இன்னைக்குள்ள மழை விடாதுனு நினைக்குறேன்" என வயதான இரு நண்பர்களின் உரையாடலும், "இவன் பிஸ்கட் போடுவானா, மாட்டானா"என திண்பவனின் வாய்பார்த்து வாலாட்டிக் குறைக்கும் நாய்க்குட்டியும், "ஐயோ.. அம்மா" என அலறி வழுக்கி கீழே விழுந்த வாலிபனின் சப்தத்தினால் அமைதியாகின.

வழுக்கி விழுந்தவனை கைதாங்கலாக தூக்கிவிட்டு, "ஏன் பாஸ் இவ்ளோ வேகமா போறீங்க, இன்னும் 5 நிமிசம் இருக்கு ட்ரெயின் கிளம்புறதுக்கு, பொறுமையா போங்க பாஸு " என்று சொல்லிய சிவா, அசட்டுப் புன்னகையுடன் "தாங்க்ஸ் ஜீ" என விழுந்தவன் கூறியதை  கவனிக்காமல் தூரத்தில் இருந்த ஆவின் பால் டிப்போவை நோக்கி நடந்தான். 

"திருச்சில எவ்வளவோ ஸ்பெஷல் இருந்தாலும், இரயில் நிலையத்துல இருக்குற ஆவின் பால் காபி தனி ஸ்பெஷல்னு", தன்னோட ஃரென்ட்ஸ் சொன்னது சிவாவிற்க்கு நியாபகம் வந்தது, "அண்ணா ஒரு காபி என சொல்லிவிட்டு, இங்க இருந்து பஸ் ஸ்டாப் எவ்ளோ தூரம்?, மதுரைக்கு மதியம் ட்ரெயின் இருக்கா?" போன்ற கேள்விகளுக்கான விடையை கடைக்காரரிடம் பெற்றுக் கொண்டு காபி சுவைக்கத் தொடங்கினான்.

மழையின் தீவிரம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. மழையை பார்த்துக் கொண்டு இருந்தவனின் கவனம் தூரத்தில் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் மேல் பதிந்தது. "ஆஹா..அடடா பெண்னே.. " என இசைப்புயலின் இசை கடையில் இருந்த வானொலியின் வழியாக இசைக்க, இதழோரம் எழும் சிறு புன்னகையுடன் தன் முழு கவனத்தையும் அவள் பக்கம் திருப்பினான் சிவா.

மாயா, கண்களில் பதட்டத்தோடு சுற்றிப்பார்த்தவள், சிவா நிற்க்கும் பக்கம் எட்டிப்பார்த்து அப்பாடா.. "D5 கோச் இங்க தான் நிற்குது" என தனக்குள்ளே கூறிக்கொண்டு நிம்மதிப் பெரு மூச்சுவிட்டு, அவனை நோக்கி நெருங்கி வந்தாள். காலியான அந்த காப்பி குவளையை தன்னை மறந்து ருசித்துக் கொண்டிருந்தான் சிவா.

ரெயில் கிளம்ப இன்னும் சில மணித்துளிகளே உள்ளது. ரயில் பெட்டியின் மீது தன் பார்வையை செலுத்தி, சிவாவை நோக்கி வேகமாக முன்னேறி வந்தவள், எதிர்பாராதவிதமாக சிவாவின் மீது மோதினாள். அவ்வளவு நேரம் சுயநினைவற்று கிடந்தவன், சட்டென திரும்பினான். "ஐயோ.. சாரி சார், தெரியாம இடிச்சுட்டேன்.. சாரி சார்" என அவள் கெஞ்சுவதை கண்கொட்டாமல் பார்த்து, "பரவாயில்ல மேடம், ஒன்னும் பிரச்சனயில்ல.. நீங்க போங்க" என அசடுவழிய பதிலளித்தான்.

இரு அடிகள் எடுத்து முன்னேறியவள் மீண்டும் அவன் பக்கம் திரும்பி புன்னகைத்தாள். சிவா அசட்டுப் புன்னகையோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் இரயில் படிகளில் ஏறி உள்ளே செல்வதற்க்கும், இரயில் தன் பயணத்தை தொடங்கவும் சரியாக இருந்தது.

இரயில் மெதுவாக நகர்ந்து சிவாவை கடக்கும் பொழுது, மாயா கண்களில் குறும்போடு அவனை பார்த்து தன் வலது கையை உயர்த்தி அசைத்தாள். அவ்வளவு நேரம் அசட்டுப் புன்னகையுடன் சிரித்துக் கொண்டிருந்தவன் அவள் கையில் தனது புது ரக செல்போன் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போய் தன் சட்டைபை, பேண்ட் வலது மற்றும் இடது பைகளில் படபடப்புடன் தேடினான். அவனது கைப்பேசியை காணவில்லை.

சிவாவின் முகத்தில் அதிர்ச்சியை பார்த்த மாயா கலகலவென சிரிக்கத் தொடங்கினாள். அதிர்ச்சியில் இருந்து மீண்ட சிவா தன் பேண்ட் பின் பையில் இருந்த மற்றொரு கைபேசியை எடுத்து அவளை நோக்கி காட்டினான். அதைக்கண்ட மாயாவிற்க்கு பேரதிர்ச்சி. காரணம் சிவாவின் கையில் இருப்பது அவளுடைய கைபேசியாகும்.

இரயில் வேகமாக முன்னேறியது, மாயா, பதற்றத்தோடு சிவாவிடம் திருடிய கைப்பேசியில் தன் கைபேசி எண்னை வேகமாக டைப் செய்து டயல் செய்தாள். முதல் ரிங்கிள் அழைப்பை ஏற்றான் சிவா..

மாயா : ஓய்..

சிவா : ஓய்......

மா : அடப்பாவி, நீ என்னவிட பெரிய கேடியா இருக்க..

சி : ஹேய்..இது நான் சொல்ல வேண்டிய டயலாக், நீ சொல்ற..

மா : ஹ்ம்.. சரி அதவிடு. எனக்கு என் போன் வேணும், அது எனக்கு ரொம்ப ராசியான போன். ப்ளீஸ் திரும்ப கொடுத்துடு.. நானும் உன் போன்-ன கொடுத்துடறேன்.

சி : ஹா..ஹா.. நீ எடுத்தது என் மொபைலே இல்லை. நானே இப்ப தான் கீழ விழுந்த ஒருத்தன்கிட்ட இருந்து ஆட்டைய போட்டேன். புது மாடலா இருக்கேனு நினச்சேன். பார்த்தா, அடுத்த 5 நிமிசத்துல என்கிட்ட இருந்து நீ அடிச்சுட்டு போய்ட்ட..

மா : எனக்கு அதெல்லாம் தெரியாது. எனக்கு என் போன் வேணும்.

சி : சரி.. வாங்கிக்கோ.. ஆனா.. இதனால எனக்கு என்ன கிடைக்கும்?

"நீ திருடின புது மாடல் செல்போன் உனக்கே திரும்ப கிடைக்கும்,  அப்புறம் என்ன திரும்ப ஒரு தடவ மீட் பண்றதுக்கான சான்ஸ்-ம் கிடைக்கும். டீல் ஓகேவா?" , என்று குறும்புடன் சொல்லிச் சிரித்தாள் மாயா.

"முதல்ல சொன்னதவிட, ரொண்டாவதா சொன்ன விஷயத்துக்காக கண்டிப்பா வருவேன்", என தன் புருவத்தை ஆள்காட்டி விரலால் வருடியவாரு ரெயில் சென்ற பாதையை பார்த்துக் கொண்டே, சிறு வெட்கத்துடன் புன்னகைத்தான் சிவா.

( இது இவர்களின் முதல் சந்திப்பு. ஆனால் இன்னும் ஒரு வருடத்தில் இருவரும் கணவன், மனைவியாக வாழ்க்கையில் பயணிக்க இருப்பதை இன்று இவர்கள்
  தெரிந்திருக்க வாய்ப்பில்லை)
- மதுரை கார்த்திக்
Thursday 9 June 2016

சிவப்பு


இரவு, பெருமழை நின்ற தூவான நேரம்..  அமைதியான அந்த இருவழி சாலையின் தெரு விளக்குகள் அனைத்தும் மின்சாரமின்றி பிணமாகக்கிடந்தன.

 சாலையின் இருளையும், மழைப்பூச்சிகளின் சப்தத்தினையும் கலைத்துக் கொண்டும், சாலையில் தேங்கிக்கிடந்த சிறு சிறு தண்ணீர் குட்டைகளை கடந்து வேகமாக காரில் வந்து கொண்டிருந்தான் பரத்.

முகத்தில் சற்று பதற்றம் படற.. அந்த இருள் நிறைந்த சாலையை வேகமாக கடந்து கொண்டிருக்கும் அந்த நொடி. சாலையின் வலப்புறத்தில் குடை பிடித்தவாறு காத்துக் கொண்டிருந்த பெண்னை பார்த்ததும் சற்று தணிந்தது. வேகத்தையும், பதற்றத்தையும் ஒரு சேர குறைத்து, வண்டியை நிறுத்தினான்.

சிவப்பு நிற சேலையும், அதே வண்ணத்தின் சற்று தூக்கலாக இதழ் சாயமும், தலை நிறைய மல்லிப்பூ வைத்து யாரையும் சுண்டி இழுக்கும் வசீகர மணத்துடனும், நின்று இருந்த ஸ்ருதி. காரின் அருகே வந்து நின்றாள்.

 இருவருக்கும் சாதகமாக பேரம் பேசி முடிக்கப்பட்டது. அங்கிருந்து கார் அவளை ஏற்றிக்கொண்டு மீண்டும் தனது பயணத்தை தொடங்கியது..

"உன்ன இந்த ஏரியால பார்த்து இல்லையே", என்று ஸ்ருதி கூற, "ஊருக்கு புதுசு இன்னைக்கு தான் வந்தேன்", என்றான் பரத்.

ஏன் இவ்ளோ வேகமா ஓட்டுற, அவ்ளோ அவசரமா, என்று சொல்லி சிரித்தாள்.

நீங்க நினைக்குற மாதிரி நான் இல்ல, எனக்கு உங்களோட உதவி வேணும். தயவு செஞ்சு முடியாதுனு சொல்லிடாதீங்க.  எனக்கு வேற யாரையும் இங்க தெரியாது. ப்ளீஸ்.

யோவ்.. என்னயா செல்ற.. இங்கபாரு மொதல்ல வண்டிய நிறுத்து.. என்னால உனக்கு எந்த உதவியும் பண்ணமுடியாது.

ப்ளீஸ், தயவு செய்து முடியாதுனு சொல்லாதீங்க. என் பொண்னு பெயர் யாழினி. 6வயசு ஆகுது. குழந்தை பிறந்து கொஞ்ச நாள்ல என் பொண்டாட்டி இறந்துட்டா. சொந்தம், பந்தம்னு யாரும் எங்களுக்கு இல்லை. தனி ஆளா இருந்துதான் என் பொண்ன வளர்த்தேன். சந்தோஷமா போய்டு இருந்த வாழ்க்கைல விதி விளையாடிருச்சு. இந்த ஊருக்கு வந்துட்டு இருக்கும் போது ஒரு ஆக்சிடென்ட். இப்ப அவ உயிருக்கு போராடிட்டு இருக்கா. தயவு செய்து அவள காப்பாத்துங்க. என்று கூறி கதறி அழத்தொடங்கினான். அவனுக்கு என்ன பதில் சொல்ல என்று புரியாமல் அமைதியாக  இருந்தாள் ஸ்ருதி. திடீரென பரத் காரை ஓரமாக நிறுத்தி இறங்கினான். ஒன்றும் புரியாதவளாக குழப்பத்தில் இருந்த ஸ்ருதி காரை விட்டு இறங்கினாள்.

அந்த நேரம் மின்சாரத்தின் வரவால் சாலையின் விளக்குகள் சட்டென உயிர் பெற, சாலையின் இருள் மறைந்து ஒளி பரவியது. வெளிச்சத்தில் சாலையின் மறுபுறம் மரத்தில் மோதியபடி ஒரு கார் நின்று கொண்டிருப்பதைக் கண்டாள். சாலையை கடந்து காரின் அருகே சென்றவளுக்கு காத்திருந்தது ஒரு பேரதிர்ச்சி. அவ்வளவு நேரம் தன்னுடன் பேசிக்கொண்டிருந்த பரத். காரில் இரத்த வெள்ளத்தில் பிணமாகக்கிடந்தான். காரின் பின் புற இருக்கையில் மயங்கிய நிலையில் காயங்களுடன் கிடந்தாள் யாழினி.

பயத்தின் உச்சத்தில் இருந்தவள், மெதுவாகத் திரும்பினாள். சாலையின் மறுபுறம் தான் வந்த காரை காணவில்லை, சுற்றும் முற்றும் பார்த்தால் சற்று தொலைவில் பரத்தின் ஆவியானது அவளை கண்கலங்கி கையெடுத்து கும்பிட்டவாறு காற்றில் கறைந்தது.

தன்னுடைய தந்தையின் வற்புறுத்தலில் விபசாரத்தை தொழிலாக எடுத்துக்கொண்டவளுக்கு , இன்று தான் புரிந்தது எல்லா ஆண்களும் தவறானவர்கள் இல்லை என்று,

நாட்கள் கடந்தன..

விபத்தில் பழைய நினைவுகளை முற்றிலும் இழந்த யாழினிக்கு  தாயாகவாக மாறினாள் ஸ்ருதி. புதியவாழ்கையில் தாயும், மகளும் சந்தோஷமா பயணித்தார்கள்.

இனி எல்லாம் சுபமே..
- மதுரை கார்த்திக்