ஒரு உயிரினத்தை கொடூரமாக அழித்துவிட்டு அதன் எச்சங்களையும், பூத உடல்களை மட்டும் நேர்த்தியாக பதப்படுத்தி கண்ணாடி பெட்டிகளில் பல அடுக்கு காவல் வைத்து பத்திரமாக பாதுகாக்கும் ஒரு நல்ல கலை உணர்வும், கருணையும் மனித இனத்திற்க்கு மட்டுமே உரிய ஒரு அழகிய பண்பாகும். அப்படி நாம்மால் அழிக்கப்பட உயிரினங்களை பட்டியலிட்டால் அதில் ஒரு முக்கிய இடத்தில் இருப்பது இந்த 'பயணிப்புறாக்கள்'.
வட அமெரிக்காவில் ஒரு காலகட்டத்தில் கோடிக்கணக்கில் கூட்டம் கூட்டமாக பறந்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருத்த பயணிப்புறாக்கள் என்கிற காட்டுப்புறாக்கள் இனத்தை அங்கு வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடியினர் போற்றுதலுக்குரியதாய் கொண்டாடினார்கள். ஆனால் ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் கால் பதித்த சில வருடங்களில் இந்த பறவையினமானது கூண்டோடு அழிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 500 கோடிக்கும் மேற்பட்ட பயணிப்புறாக்கள் இருந்துள்ளன, இவை எப்போதும் தனியே பறப்பதில்லை கூட்டமா பறந்து செல்லும் இயல்புடையது. மணிக்கு நூறு கிலோமீட்டர் என்ற அதிவேகத்தில் பறக்கும் திறன் உடைய இவை, கூட்டமாக பறக்கும் போது அந்த பகுதி முழுதும் கருமேக மூட்டத்திற்கு உள்ளானதுபோல் இருட்டிவிடும். 1873-ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி மெக்சிகன் நகரின் வான்வெளியில் காலை 7.30 மணிக்கு தொடங்கிய இந்த புறாக்களின் ஊர்வலம் முடிவதற்கு மாலை 4.30 மணி ஆனது. அண்ணார்ந்து பார்த்தால் கண்ணுக்கு தெரிந்த தூரம் வரை பயணிப்புறாக்கள் சாரை சாரையாக வந்து கொண்டே இருந்தன என்றும், இது போன்ற காட்சிகள் அந்த நாட்களில் மிக சாதாரணமானவை என்கிறார்கள், வரலாற்று ஆய்வாளர்கள்.
இப்படி பார்ப்பவர்களின் கண்களை உறுத்தும் அளவிற்கு பல்வேறு வண்ணங்களில் இறக்கைகளை விரித்து பறந்து பறந்து பரவசப்படுத்தியதும், அதன் அழகும், மென்மையுமே அதற்கு எமனாக அமைந்துவிட்டது போலும். வட அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் குடியேறிய போது அவர்கள் இந்த புறாக்களை மிகவும் தொந்தரவாக கருதி வேட்டையாடத் தொடங்கினார்கள். இவற்றை வேட்டையாடுவதும் மிக எளிதான காரியாம இருந்தது. அவை பறந்து செல்லும் பாதையில் வெறுமனே வலை விரித்தால் போதும் கொத்து கொத்தாக புறாக்கள் வலையில் சிக்கிவிடும். துப்பாக்கியால் வான் நோக்கி சுட்டால் போதும், அந்த சத்தம் கேட்ட மாத்திரத்திலே அதன் இதயத்துடிப்பு ஏகத்துக்கு எகிறி கூட்டம் கூட்டமாக இறந்து விழும். இன்னும் ஒரு எளிமையான வேட்டை முறையையும் பின்பற்றினர் அதாவது அவை கூட்டமாக பறக்கும் போது ஒரு கட்டையை அல்லது கல்லை வீசினாலும் போதும் கொத்தாக புறாக்கள் செத்து விழும். அதனால் இந்த பறவைகளை கண்மூடித்தனமாக வேட்டையாடி கொன்று குவித்தார்கள், ஐரோப்பியர்கள்.
அதுமட்டுமில்லாமல், இந்த பறவைகளை ரெயில் மற்றும் கப்பல் மூலமாக நியூயார்க் போன்ற நகரங்களுக்கு அனுப்பி வியாபாரம் செய்தனர். புறாக்களின் வர்த்தகம் லாபகரமாக நடைபெற்றது. இந்த புறாக்கறி விலை குறைவாக கிடைத்தால் இதற்கு அமெரிக்கர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. குறைவான விலையில் மிருதுவாக அதேசமயம் சுவையான இறைச்சி என்பதால் புறாக்களை வேட்டையாடுவதை முழுநேர வேலையாக செய்து அவற்றை வேகவேகமாக பரலோகத்திற்கு அனுப்பிவைத்தனர்.
இந்த பயணிப்புறாக்களில் பெண் புறா ஆண்டுக்கு ஒரே ஒரு முட்டை மட்டும்தான் இடும் தன்மையுடையது. எனவே அழிக்கப்படும் வேகத்திற்கு ஈடுகொடுத்து அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாத காரணத்தால், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனது பயணத்தை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலைக்கு பயணிப்புறா தள்ளப்பட்டது. உலகின் கடைசி பயணிப்புறாவான 'மார்த்தா' சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் 1914-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி மதியம் ஒரு மணிக்கு தனது மூச்சை நிறுத்தியது.
மனித இனத்தின் அறிவு வளர வளர மற்ற உயிரினத்தின் அழிவு மட்டுமே பெருகி வருகிறது. தான் மட்டுமே மேலான உயிரினம் என்ற கர்வத்தை விட்டு என்று சக ஜீவராசிகளை பாதுகாக்கும் குணம் அவனிடம் வருகிறதோ அன்றுதான் அவன் ஆறறிவு படைத்தவனாக இருக்க முடியும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியானது மற்ற உயிரினத்தை அழித்து அதன் மீது கட்டப்படும் கல்லறைகளாக இருந்துவிட்டால், அது மனித இனத்தின் வளர்ச்சி பாதை அல்ல. அது அவன் அழிவிற்க்கான அஸ்திவாரம் மட்டுமே. இதுவே நிதர்சனம்.
- மதுரை கார்த்திக்.
நன்றி - விக்கிபீடியா மற்றும் தினத்தந்தி.