Tuesday 12 July 2016

அவள் அவன்



1994,

குறிஞ்சியும், முல்லையும் சந்திக்கும் ரம்மியமான இடம், பனி போர்த்திய புல்வெளியில் நின்றபடி தன் பார்வையை திசைகள் எட்டிலும் செலுத்தி எதையோ தேடிக்கொண்டிருந்தான் டேவிட்.

ஒரு புறம் வான் முட்டி வளர்ந்து மேகக்தில் தன் உச்சியை மறைத்துக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களும், அந்த ஊச்சியிலிருந்து பேறிரைச்சலுடன் விழும் அருவிகளும், மறுபுறம் பல சந்ததிகளை கடந்து ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்கள் நிறைந்த அடர்ந்த வனமும், புல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருந்த மான்களின் கூட்டமும், பறவைகளின் சப்தமும், பூத்துக்குலுங்கும் வண்ணமலர்களும், அம்மலரின் தேனருந்த சுற்றித்திரியும் வண்ணத்துப்பூச்சிகளும், ரீங்காரமிடும் வண்டுகளும் என எதுவும் அவன் கண்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அவன் கண்களின் தேடலும் முடியவில்லை.

அருவியின் சாரலோ அல்லது பனியின் குளிர்ச்சியோ எது அவனை தீண்டியது என காரணம் தெரியாமல் அவனது உடல் சிலிர்க்க, சட்டென திரும்பி கண் எட்டும் தொலைவில் நின்றிருந்த  அவள் மீது தன் பார்வையை செலுத்தினான் டேவிட்.

"அவள். அவளே தான்.", என அவன் மனம் சொல்ல, அவனுடைய நீண்ட தேடலுக்கான விடை கிடைத்த மகிழ்ச்சி அவன் முகமெங்கும் பரவ, சந்தோஷ மிகுதியில் அவளை நோக்கி ஓடத்தொடங்கினான். டேவிட்டை கண்ட அந்த 'அழகு மங்கை' வெட்கத்தில் திரும்பி, பின் அவளும் வனப்பகுதியை நோக்கி மெல்ல ஓடத் தொடங்கினாள். ( மன்னிக்கவும் அவளின் பெயர் அறியாத காரணத்தால் அவளை 'அழகு மங்கை' என்றே குறிப்பிடுகிறேன். அதற்கும் காரணம் உண்டு, அவள் உடையை பார்க்கும் போது மலைவாசிப் பெண்னைப் போல தெரிந்தாலும், அவளின் அழகிற்க்கு தேவலோக மங்கைகளும் ஈடாக மாட்டார்கள். அவளின் அழகை பற்றி நான் எழுத வார்த்தைகளின்றி மௌனமாகி இங்கே முடிக்கிறேன்.)

டேவிட் அவளை பிடிக்க ஓடத்தொடங்கிய அந்த நொடி எங்கோ தூரத்தில், "காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே.." என்ற பாடல் இசைக்கத் தொடங்கியது. அவன் அந்த அழகு மங்கையை நெருங்கி செல்ல செல்ல அப்பாடலின் ஒலியும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் அந்த ஒலியின் அளவு மிகவும் அதிகரிக்க, அவனால் பொருத்துக்கொள்ள இயலாமல் காதுகளைப் இரு கைகளால் அடைத்தவாரு ஆத்திரத்தில் "ஆ......", என அலறியவாரு கண்களை விழித்தான்.

"டேய் *** சவுண்ட கம்மி பண்ணுடா", என படுக்கையில் இருந்து எழுந்தபடி அரவிந்தை திட்டினான் டேவிட்.

"என்னடா மப்பிள, செம கடுப்புல இருக்க? இன்னைக்கும் அதே கனவா?", என்றான் அரவிந்த்.

டே : மொதல்ல அந்த பாட்ட நிறுத்து.. செம கோபத்துல இருக்கேன்.

அர : சரி.. இன்னைக்காச்சும் உன் கனவுகன்னிகிட்ட பேசுனியா?

டே : இல்லடா.. வழக்கம் போல ஓடிட்டா.. நான் எப்படியும் இன்னைக்கு அவளை பிடிச்சுருப்பேன். *த்தா நீதான் சவுண்ட் வச்சு என் கனவ கலச்சுட்ட.

அர : அடேய் ஆறு மாசமா நீ இதைதான்டா சொல்ற. இந்த ஆறுமாசத்துல ஊருக்குள்ள இருக்குற பொண்ணுங்க பின்னாடி சுத்தியிருந்தாலும், இந்நேரம் யாரையாச்சும் கல்யாணம் பண்ணியிருப்ப.

டே : டேய்... அவ ஆறுமாசமா ஒரு நாள்விடாம என் கனவுல வந்துட்டு இருக்காடா. அதே இடத்துலதான் நான் தினமும் அவள பார்க்குறேன். தினமும் அவள ஓடிப்போய் பிடிக்கலாம்னு கிட்ட போவேன், ஆனா என்ன காரணம்னு தெரியல, அவள நெருங்கும் போதெல்லாம் எதாவது ஒரு தடங்கல் வருந்துட்டே இருக்கு. ஆனா ஒன்னு, கண்டிப்பா ஒருநாள் அவள நேர்ல பார்ப்பேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. உனக்கு இதெல்லாம் புரியாது.

அர : சரி.. அதை விடு மாப்பிள, காலங்காத்தால ரொம்ப ஃபீல் பண்ணாத, உடம்புக்கு ஆகாது. அப்பறம், நைட் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன், நேற்று வானதி மாத இதழோட ஆசிரியர் வந்தாரு, அட்டை பட ஓவியம் தயார் ஆகிடுச்சானு கேட்டாரு. முடிச்சுட்டியா?

"ஹ்ம்....முடிய போகுது.  இன்னைக்கு சாயங்காலம் வந்து வாங்கிக்க சொல்லு", என்று கூறியவாரு அவனால் ஓவியமாக வரையப்பட்ட அந்த அழகு மங்கையின் அருகே சென்று கண் இமைக்காமல் அந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நீண்ட பெருமூச்சை எடுத்து,"நீ இப்ப எங்க இருக்க?" என தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

----

டேவிட் ஒரு ஓவியன். மாத இதழ்கள் மற்றும் நாவல்களுக்கு வரைந்து கொடுக்கும் ஓவியங்களின் மூலம் ஆதாயம் பார்பவன். அரவிந்த் வேலையில்லா பட்டதாரி. இருவரும் சொந்த ஊரைவிட்டு பிழைப்பிற்க்காக சென்னை வந்துள்ளனர்.

சற்றுமுன் டேவிட் கூறியது போல கடந்த ஆறுமாதமாக அவன் கனவில் அந்த அழகுமங்கை தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறாள். ஒவ்வொரு நாளும் அவளிடம் பேச நினைத்து அவளை நெருங்கும் போதெல்லாம் அவன் கனவு கலைந்து விடும். வெறும் கனவு என்று சாதாரணமாக அவன் நினைக்கவில்லை, எங்கோ அவள் தனக்காக காத்துக் கொண்டிருப்பதாகவே நம்பினான் டேவிட். அவன் தங்கியிருக்கும் அறையில் உள்ள பெரும்பாலான ஓவியங்களில் அந்த அழகு மங்கையே ஆக்கிரமித்து இருந்தாள். கனவில் கண்டவளை அவ்வளவு நேர்த்தியாக ஓவியமாக உயிர் கொடுத்து இருந்தான் டேவிட்.

என்றாவது ஒருநாள் அவளை எப்படியும் நேரில் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருந்தான். அந்த நம்பிக்கையே அவள் மீது காதல் வர காரணமாக இருந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கையே ஒரு நாள் அவள் இருக்கும் இடத்திற்க்கு இவனை கொண்டு செல்ல இருக்கிறது என்பதை இன்று இவன் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிலநாட்களுக்கு பிறகு..

டேவிட் தன் கனவில் வழக்கம் போல அந்த அழகு மங்கையை கண்ட மகிழ்ச்சியில் அவளை நோக்கி ஓடத் தொடங்கினான். எப்படியும் இன்று அவளிடம் பேசிட வேண்டும் என்ற ஆர்வமிகுதியில் வேகமெடுத்து ஓடினான். அந்த அழகு மங்கையோ வழக்கம் போல அவனை கண்டு வெட்கத்தில் திரும்பி, அந்த அடர்ந்த வனம் நோக்கி ஓடினாள். இருவரும் அந்த அடர்ந்த வனத்திற்குள் சென்றனர், இந்த வனத்திற்குள் டேவிட்டின் காலடிகள் படுவது இதுவே முதல்முறையாகும்.

காட்டிற்குள் சென்றதும் அந்த அழகு மங்கை எங்கு மறைந்தாள் எனத் தெரியவில்லை. டேவிட் விழிகள் அவளைத் தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென அங்கு இருள் பரவத் தொடங்கியது. சுற்றி இருள் அவன் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. பயத்தில் உறைந்து நின்றான், உடலை அசைக்க முடியவில்லை.

யாரோ அவனது முகத்தில் நீர் தெளித்து, கன்னத்தை தட்டுவதைப் போன்ற உணர்வு.. தன்னை சுற்றி வினோதமான பல ஒலிகள் கேட்பதை உணர்ந்தான். "மயிலா... மயிலா.. கண்ணத்தொற, ஐயோ..என்ன ஆச்சு இவளுக்கு",என யாரோ அவன் காதருகே பதற்றத்துடன் கத்துவதைக் கேட்டு, போராடி கண்களைத் திறந்த டேவிட்டிற்க்கு காத்திருந்தது ஒரு பேரதிர்ச்சி.

தன்னைச்சுற்றி மலைவாழ் மக்கள் கூட்டமாக நின்றிருப்பதைக் கண்டான். அவன் தன் கனவில் தினமும் காணும் அதே இடத்திற்க்கு அருகே மயங்கி கிடந்திருப்பதை உணர்ந்தான். மெதுவாக எழ நினைத்தவன், அருகில் தேங்கிக்கிடந்த தண்ணீரில் தன் முகத்தைப் பார்த்தான். அப்போது டேவிட் கண்ட காட்சியானது அவன் இரத்த நாளங்களை உறையச் செய்தது.

தண்ணீரில் தெரிந்தது ஒரு பெண்ணின் முகம் அதுவும் டேவிட் கனவில் தினமும் வரும் அந்த அழகு மங்கையின் முகம். ஆம், தற்போது அவன் உயிர் மயிலா-வின் உடலில் உள்ளது.(அழகு மங்கையின் பெயர் 'மயிலா' ஆகும். இனி அவளை அவ்வாறே அழைக்கலாம்)

பதற்றமும்,பயமும் அவனைத் தொற்றிக் கொள்ள சட்டென எழுந்தவன் சுற்றி இருந்தவர்களை பார்த்து, "நீங்க எல்லாம் யாரு?" என குழப்பமாக கேட்க, சுற்றி இருந்தவர்களில் ஒரு பெண், "ஹேய்.. என்னாச்சு மயிலா உனக்கு?"என ஏதோ பேசத் தொடங்கும் போது, மயிலாவாக மாறிய டேவிட் அந்த பெண்ணிற்க்குப் பின்னால் ஒரு பாறையில் அவன் உருவம் ஓவியமாக வரைந்திருப்பதைப் பார்த்து அதிர்ந்தான்.

குழப்பத்தினாலும், அடுத்த அடுத்த அதிர்ச்சிகளினாலும், சொல்வதறியா பயத்தின் உச்சத்தில் இருந்த டேவிட், அந்த ஓவியத்தின் அருகே சென்று அதை மெதுவாக தன் கைகளால் வருடினான். சட்டென அவன் பார்வை வளையல் அணிந்த தன் கைகளின் வழியாக, பெண்மை ததும்பும் அவனின் உடல் மீது பரவியது. திடீரென அவன் கண்கள் இருளில் மூழ்க, அப்படியே மயங்கி கீழே விழுந்தான்.

மயக்கத்திலிருந்து கண்விழித்த டேவிட், உள்ளாடை மட்டும் அணிந்து அறையின் மூலையில் ஓரமாக மிரண்டு போய் அமர்ந்திருந்த அரவிந்தை பார்த்து, மெதுவாக எழுந்து  அவன் அருகே சென்றான்.

அர : ஏய்.. அங்கயே நில்லு கிட்ட வராத. இனிமே என்னால அடி தாங்க முடியாது, என்றான்.

டே : டேய்.. என்னடா சொல்ற, நான் எப்ப உன்ன அடிச்சேன்? சரி, நீ ஏன்டா இப்படி ஜட்டியோட உட்கார்ந்துட்டு இருக்க?

அர : நல்லா வாய்ல வந்துரும்டா. ஊமை குத்தா குத்திட்டு இப்ப ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்குற.!

டே : சத்தியமா என்ன நடந்துச்சுனு எனக்கு தெரியலடா.. தயவு செய்து சொல்லு..

அர : நான் பாத்ரூம்ல இருந்து குளிச்சுட்டு தலை துடைச்சுட்டே வெளிய வந்தேன். கட்டில்ல பித்து பிடிச்சமாதிரி நீ உட்கார்ந்து இருந்த, என்ன பார்த்ததும் "ஆ..ஊ...",னு கத்துன, நான் என்ன ஆச்சோனு பயந்து போய் உன்கிட்ட வந்தேன். நான் ஏதோ உன்ன கற்பழிக்க வர மாதிரி அலறி, என்ன அடி அடினு அடிச்ச. வலி தாங்க முடியாம நான் ஓரமா போய் உட்கார்ந்துட்டேன். அப்புறம், ரூம சுற்றி நீ வரைஞ்சு வச்சுருக்க உன் ஆளோட ஓவியத்தை எல்லாம் பார்த்துட்டு அப்படியே மயங்கி விழுந்துட்ட.

அரவிந்த் கூறியதைக் கேட்டு  பதற்றத்தோடு, "அப்படினா..!! அது கனவு இல்ல.! நான் அவ உடம்புல இருந்த மாதிரி, அவ என் உடம்புல வந்துருக்கா..!!", என்றான் டேவிட்.

அர : எவடா?

டே : மயிலா.

"யாருடா மயிலா?",என அரவிந்த் குழப்பத்துடன் கேட்க, நடந்த அனைத்தையும் அவனிடம் டேவிட் சொல்லி முடித்தான்.

அர : என்னடா சொல்ற. அப்போ அந்த பொண்னு உண்மையாவே இருக்காளா?

டே : ஆமாம்டா..  இங்க நான் எப்படி அவள கனவுல பார்த்து, காதலுச்சு, அவளுக்காக நான் ஒவ்வொரு நாளும் காத்துட்டு இருந்தேனோ, அங்க அவளும் எனக்காக காத்துட்டு இருந்துருக்கா.

அர : இப்போ என்ன பண்ணப்போற?

டே : அவளத்தேடி போகப்போறேன்.

அர : எங்கனு போய் தேடுவ.

டே : தெரியல.. ஆனா கண்டிப்பா. அவள கண்டுபிடிப்பேன்.

-------

அந்த நிகழ்விற்க்கு பிறகு டேவிட் கனவில் மயிலா வருவதில்லை. ஆனால் இருவருக்குள்ளும் இருந்த காதலும், நம்பிக்கையும் துளியும் குறையவில்லை. இருவரும் நேரில் சந்திக்கும் நாள்  வெகுதொலைவில் இல்லை என முழுமையான நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

நாட்கள் கடந்தன..

டேவிட் தனது பத்திரிக்கை நண்பர்களின் உதவியுடன், மிகுந்த சிரமப்பட்டு மயிலா இருக்கும் அந்த மலைக்கிராமத்தை கண்டறிந்தான். அவன் சென்ற நேரம் பருவமழை தீவிரமடைந்து கொண்டிருந்தது. அந்த கிராமத்திற்க்கு நடை பயணமாகத்தான் செல்ல இயலும். மழை கொட்டிக் கொண்டிருந்தது. கடினமான மலைப்பாதையை கடந்து ஒருவழியாக கனவில் அவன் காணும் அந்த இடத்தை அடைந்தான்.

கருமேகங்கள் சூழ்ந்து மழைக் கொட்டுகின்ற காரணத்தால் மொத்த இடமும் இருளின் பிடியில் இருந்தது, அவ்வப்பொழுது வந்த மின்னல்களின் கீற்றில் சிதறிய ஒளியின் உதவியோடு தன் முகம் வரையப்பட்ட அந்த பாறையின் அருகே வந்தான் டேவிட்.

அப்பொழுது அவன் காதில் இடி மற்றும் மழையின் சப்தங்களையும் தாண்டி அந்த குரல் கேட்க, குரல் வந்த திசை நோக்கித் திரும்பினான். தூரத்தில் ஒரு இளம் பெண்,"ஏங்க.. அந்த பக்கம் போகாதீங்க!",என எச்சரித்தபடி ஓடி வந்தாள். இருளில் அவள் முகம் சரியாகத் தெரிந்திருக்க வாய்பில்லை.

மீண்டும் அதே மின்னல் வெளிச்சம் பரவ, ஓடி வந்தவள் அவனை கண்ட அந்த நொடி சிலையாக உறைந்து நின்றாள். ஆம், அவள் மயிலா தான்,  இத்தனை நாட்கள் இருவரும் காத்திருந்த அந்த தருணம் இதோ வந்துவிட்டது. மின்னல் வெளிச்சத்தில் இருவரும் சந்தித்த அந்த நொடியில் பிறவிப் பயனடைந்து விட்டதாகவே இருவரும் நினைத்தனர். பெருக்கெடுத்த ஆனந்த கண்ணீரும் மழைத்துளிகளுடன் கலந்து இருவரின் கன்னங்களை நனைத்து போனது. நீண்ட மௌனத்திற்கு பின் டேவிட் அவள் பெயரை உச்சரித்து, அவள் அருகே நெருங்கினான்.

அப்பொழுது, பயங்கர சப்தமுடன் ஒரு பெரும் பேரிரைச்சல் ஏற்பட, சப்தம் கேட்ட திசைபக்கம் இருவரும் திரும்பினர். மின்னல் வெளிச்சத்தில் அந்த பயங்கரத்தை கண்டனர். காட்டாற்று வெள்ளமானது தன் வழியில் இருந்த சிறு  பாறைகளையும், மரங்களையும் அடித்துக் கொண்டு அவர்கள் இருந்த திசை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் அந்த வெள்ளமானது அவர்களை இழுத்துச் சென்றது. டேவிட் நீரின் வேகத்திலும் மயிலாவை மீட்க போராடி நீந்தினான். இருளில் அவள் எங்கிருக்கிறாள் என தெரியாத போது, சட்டென பரவிய மின்னலின் வெளிச்சத்தில் சற்று தொலைவில் அவள் உடல் முழுவதும் நீருள்மூழ்கி இரு கைகள் மட்டும் வெளியே தெரிந்தபடி  தத்தளித்துக் கொண்டிருந்தாள். அதை கண்ட டேவிட் அதிர்ச்சியில் "மயிலா..... மயிலா...!!", என அலறினான். பாவம், அந்த அலறல் நீரில் மூழ்கிய அவளது காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.

மீண்டும் இருள் பரவிய அந்த நொடி, அவ்வளவு நேரம் "மயிலா.. மயிலா..", என அலறிய டேவிட்டின் குரலும் கேட்கவில்லை. பேறிரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்த காட்டாற்றின் இரைச்சல் மட்டுமே நம் காதுகளில் விழுந்தது கொண்டிருந்தது. அடுத்து வந்த மின்னல் வெளிச்சத்தில் மயிலாவைத் தேடி போராடி நீந்திக் கொண்டிருந்த டேவிட்டையும் காணமுடியவில்லை. நீரின் வேகத்தில் இருவரும் மூழ்கப்பட்டு வெவ்வேறு திசைகளில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அந்த மின்னல் வெளிச்சத்தில் ஆக்ரோஷத்தின் உச்சத்தில் பேறிரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்த அந்த காட்டாற்று வெள்ளத்தின் கோரத்தாண்டவத்தை மட்டுமே நம்மால் காண முடிந்தது.


( நண்பர்களே.. திடீரென நிகழ்ந்த இந்த பயங்கர விபத்தில் காணாமல் போன அவளையும், அவனையும் மீட்டு, அந்த கனவுக்காதலர்களை வாழ வைக்கும் பொறுப்பினை நான் உங்களின் கற்பனை சக்தியிடம் ஒப்படைக்கிறேன். சேர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இக்கதையை இங்கே முடிக்கின்றேன். நன்றி. )




- மதுரை கார்த்திக்